காவிரி கரைகளில் திதி கொடுக்க தடை: தடையை மீறி அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்

திருவையாறு: இன்று மகாளய அமாவாசையையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக காவிரி கரைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை இன்று (17ம்தேதி) கடை பிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகள், கடற்கரைக்கு வந்து நீராடி தர்ப்பணம் கொடுப்பர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, பிதுர்பூஜை செய்ய வெளியூர், உள்ளூரில் இருந்து 10 ஆயிரம் பேர் வந்து செல்வர்.

இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை என்பதால் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். கொரோனா தொற்று காரணமாக திருவையாறு படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவையாறு சரகத்தில் உள்ள 6 ஆற்று வழிகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவையாறில் உள்ள 6 படித்துறைகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கோ, தர்ப்பணம் செய்து திதி கொடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்கள், படித்துறைகளில் பிளக்ஸ் போர்டு வைத்தும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டன. மேலும் 6 வழிகளிலும் விழிப்புணர்வு விளம்பர பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி:  ரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை துவங்கிய அமாவாசை திதி இன்று மாலை வரை உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று அதிகாலையே அம்மா மண்டபத்தில் குவிந்தனர். பொதுமக்கள் காவிரியில் நீராடி விட்டு பின்னர் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தொடர்ந்து மக்கள் குவிந்ததால் படித்துறை நுழைவுவாயிலில் போலீசார் பேரிகார்டு வைத்து தடுத்தனர். படித்துறையிலிருந்து கூட்டம் குறைந்த பின்னரே அடுத்தடுத்து வரும் மக்களை போலீசார் திதி கொடுக்க அனுமதித்தனர். மேலும் மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நேற்று மாலை படித்துறை அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மாஸ்க் அணியாமல் வந்ததுடன், சமூக இடைவெளியையும் பின்பற்றாததால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>