கன்னட திரையுலகில் போதை பொருள் சஞ்சனாவுக்கு 2 நாள் நீதிமன்ற காவல்

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம்  தொடர்பாக இதுவரை கன்னட நடிகை ராகிணி, சஞ்சனா கல்ராணி உள்பட 11 பேரை கைதாகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் 34க்கும் அதிகமான  அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களின் மகன்கள், நடிகர், நடிகைகள் பெயர்களை கூறியுள்ளனர். அவை அனைத்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக வைத்துள்ள நிலையில் ஒவ்வொருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு கேசினோ நிகழ்ச்சியில் கணவன் திகந்த்துடன் கலந்து கொண்ட கன்னட நடிகை ஐந்திரிதா ராய் சி.சி.பி அலுவலகத்தில் கணவனுடன் ஆஜரானார். இவர்களிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர்களை போலீசார் அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் போதை பொருள் வழக்கில் கைதாகி 11 நாட்கள் போலீஸ் காவலில் இருந்த நடிகை சஞ்சனா கல்ராணியின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் அவரை பெங்களூரு முதலாவது ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதே நீதிமன்றத்தில் சஞ்சனாவின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி சஞ்சனாவிற்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். சஞ்சனாவின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதற்கிடையே, நடிகை ராகிணி ஜாமீன் மனு மீதான விசாரணையை என்.டி.பி.எஸ் சிறப்பு நீதிமன்றம் வரும் 19ம் தேதிக்கு நேற்று ஒத்தி வைத்தது.

Related Stories:

>