×

மனைவியின் காது, மூக்கு அறுத்து நகை பறிப்பு: கொள்ளையை தடுத்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை:தண்டராம்பட்டு அருகே 3 பேர் கைது

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே மூதாட்டியின் காது, மூக்கை அறுத்து நகைகளை பறித்த கும்பல், தடுக்க சென்ற அவரது கணவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி(80). அவரது மனைவி அலமேலு(77). இருவரும் அதே கிராமத்தில் ஏரியின் நடுவே உள்ள பாறையின் மீது குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். மேலும், ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மூதாட்டி அலமேலுவின் அழுகுரல் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள், அவரது குடிசைக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது, காது மற்றும் மூக்கில் ரத்த காயங்களுடன் அலமேலு காணப்பட்டார். மேலும், அவருக்கு அருகில் கணவர் ராஜி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,  போலீசார் அலமேலுவை மீட்டு வாணாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவிசாரணையில், நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல், அலமேலுவிடம் கம்மல் மற்றும் மூக்குத்தியை கேட்டு மிரட்டியது. அவர் தர மறுத்ததால், கழுத்தை துணியால் கட்டி இறுக்கியுள்ளனர். பின்னர், அவரது காது மற்றும் மூக்கை அறுத்து 5 கிராம் நகைகளை பறித்துக் கொண்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ராஜி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலை மீது போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி ராஜி பரிதாபமாக இறந்தார். பின்னர், 4 நாட்களுக்கு முன்பு ராஜி ஆடுகளை விற்று வைத்திருந்த ₹20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து வாணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(20), பிரவீன்(19), சுபாஷ்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Tags : jewelery ,death ,robbery , Wife's ear, nose cut off, jewelery snatched: Old man stoned to death to prevent robbery
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...