×

சேலத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டம் : முதல்வரின் சொந்த மாவட்டத்தில் செவிலியர் பற்றாக்குறையால் கூடுதல் பணி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!!!

சேலம்:  சேலத்தில் கூடுதல் பணிச்சுமையை கண்டித்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீரென பணி புறகணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூடுதல் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறியுள்ளனர். அதாவது 800 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 350 செவிலியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கொரோனா வார்டில் பணியாற்றும் தங்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்தி தரவில்லை என செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் ஒருவர் கூறியதாவது; கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பிலிருந்தே இங்கு செவிலியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் வீரியமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதனால் தங்களின் மீதும் அதிகளவில் பணிகளை சுமத்தப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் நாங்கள் பல முறை கடிதங்கள் மூலமாகவும் பேச்சு வார்த்தை மூலமாகவும் தெரிவித்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மருத்துவமனை டீன் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 48 மணி நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற செவிலியர்களின் பணி புறகணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து செவிலியர்கள் திடீர் போராட்டம் காரணமாக கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Tags : Nurses strike ,Salem ,nurses ,district ,Chief Minister , Salem, nurses, struggle, shortage
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...