×

நாகர்கோவிலில் வறுமையால் சோகம்: கணவர் இறந்ததும் மகளுடன், குளத்தில் குதித்து பெண் தற்கொலை

சுசீந்திரம்: நாகர்கோவிலில் கணவர் இறந்த அதிர்ச்சியில், பெண் ஒருவர் தனது மகளுடன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்தார். மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன் (78). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பங்கஜம் (67). இவர்களுக்கு மைதிலி என்ற சச்சு (47), மாலா (46) என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகவில்லை. இவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. வடிவேல் முருகன் வேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தில் தான் குடும்பம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், வடிவேல் முருகனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த புண் ஆறாமல் இருந்ததால், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். மிகப்பெரிய அளவில் வறுமை கோர தாண்டவம் ஆடியது. குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வடிவேல் முருகன் திடீரென உயிரிழந்தார். இதனால் பங்கஜமும், அவரது மகள்களும் அதிர்ச்சி அடைந்தனர். இனி உதவ யாரும் இல்லை என முடிவு செய்த அவர்கள், தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். வடிவேல் முருகனின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு, தனது இரு மகள்களுடன் பங்கஜம், ஒழுகினசேரி, கோதை கிராமம் வழியாக சுசீந்திரம் நோக்கி நடந்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் சுசீந்திரம் - நல்லூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வயலுக்கு வந்த விவசாயி ஒருவரிடம், அருகில் ஏதாவது குளம் உள்ளதா? என கேட்டுள்ளனர். அவர் எதற்கு என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வேகமாக நடந்துள்ளனர். பின்னர் நல்லூர் அருகே சென்றவர்கள், அந்த பகுதியில் உள்ள இளைய நயினார் குளத்தை பார்த்தனர். ஆள் நடமாட்டம் இல்லாமல் தண்ணீரும் நிரம்ப இருந்ததால், கைகளை துணியால் கட்டிக்கொண்டு ஒன்றாக குளத்துக்குள் குதித்தனர். இதில் சிறிது நேரத்தில் பங்கஜமும், மாலாவும் இறந்தனர். மைதிலி மட்டும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தார்.

அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்ற சிலர் இதை கவனித்து, சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சு பணியாளர்கள் வந்து, தண்ணீரில் தத்தளித்த மைதிலியை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குளத்துக்குள் சடலமாக மிதந்த பங்கஜம், மாலா ஆகிய இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் குளத்தில் இறந்தவர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மைதிலியிடம் விசாரித்த போது, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெரிய வந்தன. அதன் பின்னரே நாகர்கோவிலில் வீட்டுக்குள் கிடந்த வடிவேல் முருகன் உடலையும் போலீசார் மீட்டனர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளத்துக்குள் பெண்கள் சடலம் கிடக்கும் தகவல் அறிந்து, எஸ்.பி. பத்ரி நாராயணனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் கதறிய மகள்

குளத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மைதிலியை சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். விசாரணைக்காக சென்ற போலீசாரிடமும், டாக்டர், நர்சுகளிடமும் மைதில் கதறி அழுதார். நான் மட்டும் எப்படி பிழைத்தேன். இனி உயிராேடு இருந்து என்ன செய்ய போகிறேன். யாரும் ஒரு வேளை சோறு கூட தர மாட்டார்கள். வீடு தர மாட்டார்கள். என்னை கொன்று விடுங்கள் என கூறி கதறி அழுதார். மாத்திரை வழங்க சென்ற நர்சு ஒருவரின் காலில் விழுந்து அவர் கதறியது பரிதாபமாக இருந்தது.

அம்மன் உத்தரவுக்காக காத்திருப்பு

வடிவேல் முருகன் குடும்பத்தினர் அக்கம், பக்கத்தில் உள்ள யாரிடமும் பேசுவதில்லை. முத்தாரம்மனை நினைத்து வழிபாடு செய்வார்கள். தனது இரு மகள்களையும் சின்ன முத்தாரம்மன், பெரிய முத்தாரம்மன் என்று தான் வடிவேல் முருகனும், அவரது மனைவியும் அழைப்பார்கள். மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வில்லையா?. இருவரையும் வேலைக்கு அனுப்ப வேண்டியது தானே என அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பங்கஜத்திடம் கேட்ட போது, முத்தாரம்மன் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என கூறி உள்ளார். சாப்பிடுவதில் இருந்து இரவில் உறங்கும் வரை முத்தாரம்மன் உத்தரவு தந்தால் தான் எதையும் செய்வோம் என கூறுவார்கள்.

புதிய வேஷ்டி, சட்டை எடுத்து வைத்தனர்

தங்களுடைய மறைவுக்கு பின் எப்படியும் போலீசார் அடையாளம் கண்டுபிடித்து வீட்டுக்கு வருவார்கள். அப்போது இறந்து கிடக்கும் கணவர் உடலையும் மீட்பார்கள். அதன் பின்னர் உடலை அடக்கம் செய்வதற்கு முன், அவரது உடலில் புதிய வேஷ்டி, சட்டை அணிய வேண்டும் என்பதற்காக, வடிவேல் முருகன் உடல் அருகே வீட்டில் இருந்த ஒரு புதிய வேஷ்டி, சட்டையை எடுத்து பங்கஜம் வைத்து உள்ளார். அதன் பின்னர் நள்ளிரவில் மகள்களுடன் தற்கொலைக்காக வந்துள்ளார்.

Tags : Tragedy ,suicide ,Nagercoil ,pool , Nagercoil, woman, suicide
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு