×

பேரவை துளிகள்...

* அண்ணா படத்திற்கு மாலை அணிவிக்க மறந்த அரசு: பேரவையில் துரைமுருகன் ஆதங்கம்
தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவையில் வைக்கப்பட்டுள்ள அவரின் படத்தை பார்த்த போது வருத்தமாக உள்ளது. அவரது பிறந்த நாளான இன்றாவது அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்திருக்க வேண்டும். ஆனால் மாலை போடவில்லை. அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக அரசு, இன்று இல்லாவிட்டாலும் நாளை அவைக்கு வரும்போது அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்தால் அது மகிழ்ச்சியாக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கொரோனா தொற்று இருக்கிற காரணத்தால் தான் அண்ணாவின் படத்திற்கு மாலை போடவில்லை. மாலை போடக்கூடாது என்பது அரசின் எண்ணம் இல்லை. ஆனால் தற்போது கொரோனோ காலமாக இருப்பதால், அந்த தொற்று எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. நீங்கள் வேண்டுகோள் வைத்தால் நிச்சயமாக நாளை மாலை அணிவிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

* கொரோனாவிற்கு ரூ.7,167.97 கோடி செலவு: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பேரவையில் ஓபிஎஸ் பதில்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு விவாத்தில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிதி செலவு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பேசினார். அதற்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் உரையின் போது, கொரோனா பேரிடரின் காரணமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மறுபரிசீலனை செய்து, நிதி ஒதுக்கீடு செய்வது பற்றிய அறிவிப்பு இல்லை என்ற குறைபாட்டை விளக்க வேண்டும் என்று சொன்னார். அவருக்கு சில விளக்கங்களை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். கோவிட்-19 நோய் பரவலால் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் அதிமுக அரசு மக்கள் நலச் செலவினங்களைக் கட்டுப்படுத்திட விரும்பவில்லை.   

2020-21ம் ஆண்டிற்கு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என சிலர் இங்கே முன்வைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் வாதம் அவசியம் இல்லாதது. இதுபோக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து கொள்முதலுக்காக ரூ.830.60 கோடி, மருத்துவ கட்டுமானப் பணிகளுக்கான ரூ.147.10 கோடி, கூடுதலாக நியமிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கான உணவு மற்றும் இதர ஊக்க செலவினங்களுக்காக ரூ.243.50 கோடி, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பொதுவான செலவாக ரூ.638.85 கோடி, மருத்துவமனை  தனிமைப்படுத்துதல் செலவினங்களுக்கான ரூ.262.25 கோடி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.143.62 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்மூலம் இலவசமாக பொருட்கள் வழங்கி வருவதனாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நிருபர்கள், மீனவர்கள், திருநங்கைகள், பழங்குடியினர்கள், வியாபாரிகள், சீர்மரபினர், நரிக்குறவர், பூசாரிகள், உலமாக்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், முடிதிருத்துவோர், நலவாரிய உறுப்பினர்களுக்குளுக்கு ரொக்கப் பண உதவியாக மொத்தம் ரூ.4,896.05 கோடி செலவிடப்பட்டுள்ளது.  ஆக மொத்தம், கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, ரூ.7,167.97 கோடி, அதிமுக அரசினால் செலவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

* கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டு சிறை: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொண்டு வந்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 காரணமாக இறந்து போன நபர்களை புதைத்தல் மற்றும் எரியூட்டல் செய்தலை பொதுமக்கள் தடுப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது மனித சடலத்திற்கு அவமதிப்பினை ஏற்படுத்துகின்ற மிகவும் கண்டிக்கதக்கவையாகும். எனவே, அது தண்டனைக்குரிய குற்றம் என முடிவு செய்தும், அதற்கிணங்கிய வகையில் மேற்சொன்ன நோக்கத்திற்காக 1939ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தினை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

அதன்படி 2020ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார அவசர சட்டமானது. அதன்படி, தானாகவோ அல்லது ஒரு குழுவின் உறுப்பினராகவோ இருந்து அறிவிக்கை வெளியிடப்பெற்ற நோயினால் பாதிக்கப்படும் போது இறந்து போன எந்தவொரு நபரின் உடலை புதைப்பதை அல்லது எரியூட்டுவதை தடுக்கும், இடையூறு செய்யும், தடுக்க, இடையூறு செய்ய முயற்சிக்கும் நபர் எவரும் பண தண்டத்துடன் கூடிய ஓர் ஆண்டிற்கு குறையாத, ஆனால், 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாகும் ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

Tags : Assembly , Assembly drops ...
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு