×

வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் புதர் மண்டி சிதிலமடைந்த விசுவக்குடி அணைக்கட்டு கரை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி அருகே பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகும் காட்டாறு எனப்படும் கல்லாற்று நீரை சேமிக்க பச்சைமலை- செம்மலை மலைக்குன்றுகளை 685 மீட்டர் நீளத்துக்கு இணைத்து ரூ.33.67 கோடியில் விசுவக்குடி அணைக்கட்டு 2015ம் ஆண்டு நபார்டு வங்கி கடனுதவியில் கட்டி முடிக்கப்பட்டது. இதுவரை 2015, 2017, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் அணையில் இருந்து பாதுகாப்பு கருதியும், சுற்றுவட்டார நிலத்தடி நீர்மட்டம் உயரவும் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழையே தற்போது எதிர்பாராதபடிக்கு சற்று அதிகம் பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியான பச்சைமலை பகுதியில் பெய்து வரும் மழையால் ஏற்கனவே கோரையாறு, எட்டெருமைபாழி அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 8, 9, 10ம் தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பச்சைமலையில் பெய்த மழைநீர் இரவு, பகல் என தொடர்ந்து மலைச்சரிவுகள் வழியாக வழிந்தோடி விசுவக்குடி அணைக்கட்டுக்கு வந்தபடி உள்ளன. செம்மண் கலந்து வருவதால் அணையின் உள்ளே சிகப்பு நிறத்தில் மழைநீர் 10 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து கனமழை பெய்தால் விசுவக்குடி அணைக்கட்டு நிரம்பும் சூழல் உள்ளது. ஆனால் கனமழையை எதிர்நோக்கி அணையின் பாதுகாப்பில் அக்கறை காட்டப்படாததால் கரையெங்கும் எருக்கஞ்செடிகள், கருவேல முட்கள் புதர்கள் போல ஆளுயரத்துக்கு அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கரையின் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளோ சுற்றுலா வளர்ச்சி நிதியை கொண்டு பூங்கா, கண்காணிப்பு கோபுரம் கட்டும் பணிகளையே ஜவ்வுபோல இன்னும் காலங்கடத்தி செய்து வருகின்றனர்.

இதனால் வடகிழக்கு பருவமழையால் பேராபத்து ஏற்படும் முன்பாக அணையின் கரைகளை பலப்படுத்தி, புதர் செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : bank ,Visuvakudi Dam , Northeast Monsoon, Visuvakudi, Dam
× RELATED ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை...