×

சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதால் கொன்றோம்

பேரையூர்: சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கொன்றதாக கைதான கணவர் உட்பட 3 பேர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த தவிடன் மகள் ஜெயசக்திபாலா (18). இவருக்கும் விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் மத்தியசேணையைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டிக்கும் (20), பத்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டால், கடந்த 3 மாதமாக ஜெயசக்திபாலா, பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இவர் கடந்த 12ம் தேதி வி.அம்மாபட்டி கண்மாயில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக கணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், ஜெயசக்திபாலா பேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் மூலம் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெயசக்திபாலா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். முத்துப்பாண்டி பலமுறை மனைவியை அழைத்தும் அவர் போகவில்லை என கூறப்படுகிறது. வி.அம்மாபட்டியில் உள்ள உறவினர்கள், தம்பதியிடம் சமாதானமாக பேசி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க திட்டமிட்டனர். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த முத்துப்பாண்டி, காரியாபட்டி கல்குறிச்சியைச் சேர்ந்த தனது நண்பர் மகன் கண்ணன் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மத்தியசேனையில் இருக்கும் உறவினர் மகன் கணேசன் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

சம்பவ தினத்தன்று கண்ணனிடம் மனைவியை அழைத்து வருமாறு கூறிவிட்டு, முத்துப்பாண்டி, கணேசனுடன் அம்மாபட்டி கண்மாய்க்குள் பதுங்கிக் கொண்டனர். கண்ணன் இரவு 9 மணியளவில் அம்மாபட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டு ஜெயசக்திபாலவை போனில் அழைத்துள்ளார். வீட்டிலிருந்து வந்த அவரை, கண்ணன் கண்மாய்க்குள் அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் சேர்ந்து ஜெயசக்திபாலாவை குத்திக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : friends , Social networking site, male friend
× RELATED தீபாவளி மது விருந்தில் தகராறு 2 பேர் அடித்து கொலை: நண்பர்கள் கைது