×

கொரோனா ஊரடங்கால் சிதைந்துபோன சிற்ப கலைஞர்கள் வாழ்க்கை : நிவாரணம் வழங்கி அரசு உதவ கோரிக்கை

கொரோனாவின் கோர பிடியால் திருப்பூர் திருமுருகன் பூண்டி சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பின்னலாடைக்கு பெயர் போன குட்டி ஜப்பன் என்று அழைக்கப்படும்  திருப்பூரில், அனுப்பர்பாளையம் பாத்திரம், திருமுருகன் பூண்டி சிற்பக்கலைகள், காங்கயம் தேங்காய் எண்ணை, ஊத்துக்குளி வெண்ணை, போன்ற பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கின்றது. இதில் சிற்பக்கலைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றது. திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகனநாத சுவாமி கோயில் மற்றும் கேது ஸ்தலம் ஆகியவை உள்ளது. திருமுருகன் பூண்டியில் சுமார் 60 சிற்பச்சாலைகள் உள்ளன. இங்கு சிற்ப வேலைகள் செய்யும் கலைஞர்கள் கடவுள் பக்தியோடு விரதமிருந்து பணிகளை தொடங்குகிறார்கள். சாமி சிலைகள் செய்வதற்கு சிற்பச்சாலைகளில் ஆண்கல், பெண்கல், அலிக்கல் என்ற 3 வகைகளில் கல்கள் உள்ளது.

ஆண் தெய்வங்களை ஆண்கல்லிலும், பெண் தெய்வங்களை பெண்கல்லிலும் செய்கிறார்கள். மூன்றாவதாக இருக்கும் அலிகல்லில் தெய்வங்களை வைக்கும் அடி செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். அலிக்கல்லில் ஆண், பெண் இரண்டு தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்யலாம் என்பதால் பெரும்பாலும் அலிக்கல்லை பயன்படுத்துகிறார்கள். இந்த சிற்பச்சாலைகளில் ரூ. 1000 முதல் கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் சிலைகள் செய்யப்படுகின்றன. அதிகபட்சம் 25 டன் எடையுள்ள கல் சிலைகளை செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வடிவமைத்த சிற்ப சிலைகளை கொடுக்கும்போது சிலைகளுக்கு ஆயில் பாலீஸ் செய்து, பிறப்பிட பூஜைகள் செய்துதான் கொடுக்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் சிலைகளை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடு என அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்த சிற்ப தொழில் கொரோனா தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கி கிடக்கிறது. இது குறித்து சிற்பசாலை உரிமையாளர் மற்றும் சிற்ப சங்க செயலாளர் யுவராஜ், ‘‘நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்தும் இங்கு சாமி சிலைகள் செய்வதற்கு ஆர்டர்களை கொடுப்பார்கள். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் சிவன், முருகன் போன்ற சிலைகள் செய்வதற்கு ஆர்டர்கள் வரும். நாங்கள் ஆர்டர்கள் வந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலைகளை செய்து அனுப்பி வைப்போம். கொரோனாவிற்கு முன்பு பல சிலைகள் ஆர்டர் வந்துள்ளது. அந்த சிலைகளை நாங்கள் தயார் செய்து வைத்துள்ளோம். ஆனால் கொரோனா ஊரடங்கால் இன்னும் ஒரு சிலையைகூட பெற்று செல்ல யாரும் வரவில்லை. கோயில்கள் அடைப்பால் சிற்பத்தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எங்கள் சிற்பச்சாலையில்கூட ஒரு கோயிலுக்கு உண்டான 10க்கும் மேற்பட்ட சிலைகள் வடிவமைத்து தயார் நிலையில் உள்ளது. ஆனால் அவர்கள் பணம் கொடுத்து எடுக்காததால் அந்த சிலைகள் அப்படியே உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனைத்து தொழில்களுக்கும் நிவாரணம் வழங்கியது. ஆனால் எங்கள் சிற்ப தொழிலை கண்டுகொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் சென்று திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நிவாரணம் வழங்க கோரி மனு அளித்தோம். அந்த மனுவின் மீதும் நடவடிக்கை இல்லை. சிற்பத்தொழிற் சாலைகளுக்கு கொரோனா கால வேலையின்மையை போக்க அரசு உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

சிற்ப சாலை தொழிலாளி பாபு கூறியதாவது: ‘‘சிற்ப சாலையில் வாரத்திற்கு 7 சிப்ட் வேலை வழங்கி வந்தார்கள். ஆனால் கொரோனா காலத்தில் 3 சிப்ட் மட்டுமே வேலை செய்யும் அளவிற்குதான் உள்ளது. அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துவது மிகவும் சவாலாக உள்ளது. இன்னும் சில வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கடும் சிரமத்தில் உள்ளனர். சிற்ப தொழில்கள் மீண்டும் சூடுபிடிக்க குறைந்தது 8 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் சிற்ப கலைஞர்களான எங்கள் வாழ்க்கை சிதைந்துள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Sculptors , Corona curvature, deformed, sculptors, life, request for government help
× RELATED அயோத்தி ராமர் கோயிலுக்கு 44 பிரமாண்ட...