×

திருக்குறுங்குடி கோயிலில் உறியடி உற்சவம்

களக்காடு : திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில், கட்டுப்பாடுகளுடன் உறியடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையன்று உறியடி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது.

தற்போது கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு வனத்துறை சோதனை சாவடியில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் அர்ச்சனை செய்யவும், பிரசாதங்கள் வழங்கவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக மாலையில் நடைபெறும் உறியடி உற்சவம், நண்பகல் 11 மணிக்கு நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை தச்சநல்லூர் கண்ணன் சேவா சங்கம் சார்பில் உறியடி உற்சவம் தொடங்கியது. கோயில் சன்னதியில் இருந்து பாடல்கள் பாடி வந்த பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க உறியடித்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

முன்னதாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். விஷேச அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் நம்பி சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ உத்தரவுப்படி, வன சரகர் பாலாஜி தலைமையில் வனத்துறை ஊழியர்களும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : festival ,Thirukurungudi temple , Uriyadi festival ,Thirukurungudi , temple function, kalakkad
× RELATED நவராத்திரி திருவிழாவில் கொலு