×

தங்க கடத்தல் சொப்னாவுடன் தொடர்பு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் சஸ்பெண்ட் நீட்டிக்கப்படுமா?: 3 பேர் குழுவை அமைத்தது அரசு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை  செயலாளராக இருந்தவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர். கேரளாவில் சமீபத்தில்  நடந்த ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தல் விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய சொப்னா,  சரித்குமார் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருடன் சிவசங்கருக்கு தொடர்பு  இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக தங்கராணி சொப்னாவுடன் சிவசங்கருக்கு  நெருங்கிய பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்ய  கேரள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனாலும், தனக்கு மிகவும்  நெருக்கமானவர் என்ற வகையில் முதல்வர் பினராய் விஜயன், சிவசங்கரை சஸ்பெண்ட்  செய்ய மறுத்து விட்டார். பின்னர், இந்த பிரச்னை வலுத்ததால்  வேறுவழியின்றி முதல்வர் பினராயி விஜயன், முதன்மை செயலாளர் பதவியில் இருந்து  சிவசங்கரை சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து, சிவசங்கரிடம் என்ஐஏ 2 முறையும், சுங்க இலாகா ஒருமுறையும் விசாரணை நடத்தின.இந்நிலையில், சிவசங்கரின் சஸ்பெண்ட் உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்ய,  கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில், கூடுதல் தலைமை செயலாளர்கள்  சத்யஜித் ராஜன் மற்றும் டி.கே.ஜோஸ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அரசு  நியமித்துள்ளது.

ஆதாரம் கிடைக்கவில்லையா?
தங்கம் கடத்தலில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கேரள அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால், அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை அது ரத்து செய்யக்கூடும் என்ற தகவல், சில நாட்களுக்கு முன் பரவியது. அதற்கு ஏற்றாற்போல், இந்த சிறப்புக் குழுவை கேரள முதல்வர் நியமித்துள்ளார்.

விதிமுறைகள் சொல்வது என்ன?

* அகில இந்திய சேவை விதிகளின்படி, ஒரு ஐஏஎஸ்  அதிகாரியை சஸ்பெண்ட் செய்து 60 நாட்களுக்குள் மீண்டும் விசாரிக்க வேண்டும்.
* சஸ்பெண்ட் நடவடிக்கையை அதற்குமேல் நீட்டிக்க வேண்டும் என்றால், அரசால் அமைக்கப்படும் சிறப்புக்குழு பரிந்துரை செய்ய  வேண்டும்.
* இக்குழு பரிந்துரை செய்யும் பட்சத்தில், மேலும் 120 நாட்களுக்கு மாநில அரசே சஸ்பெண்ட் செய்யலாம்.
* அதன் பிறகும் சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர வேண்டுமானால், மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.



Tags : Sivasankar ,committee ,government , Gold smuggling, with Sopna, IAS officer Sivashankar, suspended
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...