நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு ஜெகத்ரட்சகன் மனுவுக்கு பதில் தர வேண்டும்: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெகத்ரட்சகனின் மகனை சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக்  கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் யாருமே விசாரணைக்கு  ஆஜராக வில்லை என்றார்.

அதற்கு பதிலளித்த ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வக்கீல் மணிசங்கர், ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதால் ஆஜராக முடியவல்லை. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராவது குறித்து சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டார். ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அக்டோபர் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Related Stories:

>