×

காய்ச்சல் உள்ளவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்யாமல் இருப்பது ஆபத்து: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: காய்ச்சல் உள்ளவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்யாமல் தாமதிப்பது மிகவும் ஆபத்தானது, என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தொடர் கண்காணிப்பு மையத்தையும் துவங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 25 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது 1200 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1,42,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவை ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை. தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் மூலம் 1 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் பயன்பாடு குறைவாக இருப்பதால் ஆக்சிஜன் அதிவிரைவாக வழங்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றை அதிகரித்துள்ளோம்.

கிருஷ்ணகிரி, கடலூரில் மட்டுமே 10 சதவீதத்திற்கு அதிகமான பாதிப்பு உள்ளது. இதனை ஓரிரு நாளில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2000 மினி கிளினிக் உருவாக்கும் திட்டத்திற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 மாத காலமாக அரசு எந்த தொய்வுமின்றி கொரோனா தடுப்பு பணி நடந்து வருகிறது. விழிப்புணர்வு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு மக்கள் வரவேண்டும். தனக்கு இந்த நோய் இருக்காது என நினைத்து பலர் அலட்சியமாக உள்ளனர். நோய் தொற்றால் நுரையீரல் பாதிப்பு அதிகமான பிறகு சிகிச்சைக்கு வரும்போது சிகிச்சை மேற்கொள்ள சவாலாக உள்ளது. எனவே சிறிய அளவிலான காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Radhakrishnan , nterview with Radhakrishnan, Secretary, Department of Coronary Tract, Risk and Health, People with Fever
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்