×

அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் அண்ணா பல்கலை அங்கீகாரம் ரத்து? கடிதம் வரவில்லை என அமைச்சர் கூறிய நிலையில் ஏஐசிடிஇ கடிதம் வெளியானதால் பரபரப்பு: மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்று ஏஐடிசிஇயிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று அமைச்சர் கேபி.அன்பழகன் கூறி வந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்துக்கு ஏஐடிசிஇ எழுதிய கடிதம் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய பொறியியல் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாமல் போனது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வை நடத்த முடியாது என்று கருதிய தமிழக அரசு இறுதியாண்டு செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் கேபி.அன்பழகன் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்தியிருந்தால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ‘‘தமிழகத்தில் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக, அறிவித்ததாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மாணவர்களுக்கு திரும்ப தேர்வு நடத்த வேண்டும்’’ என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது. இது, மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த கடிதத்தின் நகலை கடந்த 30ம் தேதி அண்ணா பல்கலை நிர்வாகம் சார்பில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து தெரியாத உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் அரியர் தேர்வு ரத்து செல்லாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அரசுக்கு கடிதம் எழுதவில்லை. அப்படி கடிதம் வந்திருந்தால் துணை வேந்தரை காட்ட சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

 இந்த நிலையில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் வந்த கடிதத்தை வெளியிட முடியாது என்று அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அந்த கடிதம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘‘அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. தேர்வின்றி தேர்ச்சி பெறும் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் ஏற்காது. பல்கலையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரியர்ஸ் மாணவர்களின் தேர்வு ரத்து செல்லுமா, செல்லாதா என்று குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது. நாங்கள் வெளியிடவில்லை என்று அண்ணா பல்கலை துணை வேந்தர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு ரத்து விவகாரம் முடிவுக்கு வராமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் பரபரப்பையும், கலக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

கேள்விக்கு என்ன பதில்?
* இந்தக் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்றால், வெளியிட்டது யார்?
* ஏஐசிடிஇ ஒரு பக்கமும், அரசு மறு பக்கமும் மாறி மாறி தகவல்களை கூறி வருவது 4.5 லட்சம் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
* இது போலியான கடிதம் என்றால்? ஏற்கனவே அரசின் உத்தரவு செல்லாது என்று தனக்கு ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணாபல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியிருந்தார். அந்த கடிதம் எங்கே?
* 4.5 லட்சம் மாணவர்களின் நிலை தற்போது திரிசங்கு நிலையில் உள்ளதால், அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்?
* கொரோனா பாஸ் மாணவர்களுக்கு வேலை தர பல நிறுவனங்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இவ்வாறு பல்வேறு கேள்விகளை மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்பியுள்ளனர். இதற்கு அரசுதான் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
* ஏஐசிடிஇயிடம் அனுமதி பெறாமல் தேர்வு அறிவிப்பு வெளியிட தமிழக அமைச்சர் அன்பழகனுக்கு அதிகாரம் உள்ளதா?
* அண்ணா பல்லைக்கழகம் அல்லது ஏஐசிடிஇயிடம் அனுமதி பெறாமல், தமிழக அரசு அறிவித்திருப்பது, அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் கேலிக்கூத்தாக்கியுள்ளதா?

Tags : Arias ,Anna University ,AICTE , Ariers students, graduation affair, Anna University,, revocation of accreditation? Letter not received, Minister, AICTE letter, students shocked
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு