×

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது; தொடர்ந்து எக்மோ கருவி சிகிச்சை..!! மருத்துவமனை அறிக்கை

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74).  கடந்த ஆகஸ்டு மாதம் 5ந்தேதி அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது என்றும் கூறியிருந்தார். யாரும் கவலைப்பட வேண்டாம். இன்னும் 2 நாட்களில் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 13ந்தேதி இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலம் பெற வேண்டும் என நடிகர் நடிகையர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பிற கலைஞர்களும் பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்த நிலையில், அவரது உடல்நிலை சீரடைந்து உள்ளது என கடந்த திங்கட்கிழமை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் கூறினார்.  

இந்நிலையில், எம்.ஜி.எம். மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.  அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை மற்றும் எக்மோ கருவி சிகிச்சையும் தொடர்ந்து தேவைப்படுகிறது. அவர் தெளிவாக காணப்படுகிறார்.  நாம் பேசும்பொழுது அதனை புரிந்து கொள்கிறார்.  அவரது உடல்நலம் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது.  அவரது நடப்பு மருத்துவ நிலையானது ஐ.சி.யூ.வில் இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

Tags : SB Balasubramaniam , Playback Singer, SB Balasubramaniam, Ecmo Instrument Therapy, Hospital
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...