×

திருநின்றவூர் பேரூராட்சியில் திறந்தவெளி சுடுகாட்டில் சடலம் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சியில் திறந்தவெளி சுடுகாட்டில் சடலம் எரிப்பதால் சுற்று சுழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அங்குள்ள எரிவாயு தகன மேடையை பயன்படுத்த அதிகாரிகள் விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 3,6,7,8,9,10 ஆகிய 6 வார்டுகளில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களின் சடலத்தை தகனம் செய்ய 10வது வார்டில் உள்ள ராமதாசபுரம் சுடுகாட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், 2013-14ம் ஆண்டில் அப்போதைய ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அப்துல் ரஹீம் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருநின்றவூர் பேரூராட்சி, 17வது வார்டான கிருஷ்ணாபுரத்தில் ₹1 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, பேரூராட்சி பகுதி அனைத்து வார்டுகளை சேர்ந்தவர்களும் எரிவாயு தகனமேடையை பயன்படுத்தி சடலங்களை பாதுகாப்பான முறையில் தகனம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அங்கு  சில வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டும் சடலங்களை தகனம் செய்து வருகின்றனர்.

மேலும், மேற்கண்ட 6 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் ராமதாசபுரம் சுடுகாட்டையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அங்கு அடிக்கடி இரவு நேரங்களில் சடலங்களை கொண்டு வந்து போட்டு எரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முதியோர்கள், சிறுவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. தற்போது, கொரோனா தொற்று பரவும் சூழ்நிலையில், இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்பும் நோய் பாதிப்பிற்கு மேலும் வழிவகுக்கும். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக பணம் வசூலிப்பு
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருநின்றவூர் எரிவாயு தகன மேடையில் சடலங்களை தகனம் செய்வதற்கு ₹2,500 மட்டுமே செலவாகும். ஆனால், ராமதாசபுரம் சுடுகாட்டில் சடலங்களை எரிக்க ₹7 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை சுடுகாட்டு ஊழியர்கள் வாங்கி கொள்கிறார்கள். இவர்கள்,  பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றி பணம் வசூலிக்கின்றனர். எனவே, பல லட்சம் செலவில் கட்டப்பட்ட திருநின்றவூர் எரிவாயு தகன மேடையை பயன்படுத்தி சடலங்களை எரிக்க பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruninravur , Thiruninravur Municipality, Open Space Fire
× RELATED குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி...