5 மாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்றம், செஷன்ஸ் கோர்ட்டுகள் செயல்பட தொடங்கின: ஐகோர்ட்டில் 6 அமர்வுகளில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றங்கள் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் விசாரணை தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் மாவட்ட நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் சமூக இடைவெளி கடைபிடிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நேரடி விசாரணைகள் தொடங்கின.

 இந்த நிலையில், நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் வக்கீல்கள் வாழ்வாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வக்கல்கள் சங்கங்கள் தொடர்ந்து தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை திறப்பது குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது.

அதில், சோதனை முயற்சியாக செப்டம்பர் 7 முதல் 6 அமர்வுகளை மட்டும் திறந்து வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை உள்ள வக்கீல்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வழிகாட்டு நெறிமுறைப்படி நீதிமன்ற அறைகளில் விசாரணை நடைபெறும். இதைதொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றங்களையும் செப்டம்பர் 7ம் தேதி முதல் திறக்க முடிவு செய்து தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றங்கள் நேற்று காலை 10.30 மணி முதல் விசாரணையை தொடங்கின.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு உள்ளிட்ட 6 அமர்வுகளில் விசாரணை தொடங்கியது. முதலில் நேரடி விசாரணையும், மதியம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணையும் நடைபெறவுள்ளது. செஷன்ஸ் நீதிமன்றங்களிலும், சிறு வழக்குகள் நீதிமன்றங்களிலும் இன்று விசாரணை தொடங்கியது. ஆஜராகவுள்ள வக்கீல்களின் ஆவணங்கள், வழக்கு எண்கள் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கு தொடர்ந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சோதனை முயற்சியாக திறக்கப்பட்டுள்ள நீதிமன்ற நேரடி விசாரணையின் அடுத்த கட்டம் குறித்து வரும் 22ம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய நிர்வாக குழு ஆலோசனை நடத்தவுள்ளது. வெள்ளை சட்டையில் கழுத்து பட்டை மட்டும் அணிந்து வக்கீல்கள் சென்றனர். கோட்டுடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாமல் வக்கீல்களும், சாட்சிகளும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, எஸ்பிளனேட் கேட்டில் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதை தொடர்ந்து வழக்கு ஆவணங்கள் சோதனைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>