×

அரியர்ஸ் தேர்வுகள் தொடர்பாக ஏஐசிடிஇ கடிதம் வரவில்லை: உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

சென்னை: கொரோனா ஊரடங்கையொட்டி அரியர்ஸ் தேர்வுகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர்ஸ் தேர்ச்சி செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இதை மறுத்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஏஐசிடிஇ மின்னஞ்சல் துணைவேந்தருக்கு வந்திருந்தால் அதை அவர் வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் சொந்த கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அரியர்ஸ் தேர்வுகள் தொடர்பாக ஏஐசிடிஇ சார்பில் கடிதங்கள் எதுவும் தமிழக அரசிற்கு வரவில்லை. யுஜிசி மற்றும் ஏஐடிசிஇ விதிகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றும். அரியர்ஸ் தேர்வுகளுக்கு தமிழக அரசு விலக்கு அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திற்கு எந்தவித கோரிக்கை வைத்தார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம்தான் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* அரியர் குறித்து முடிவெடுக்கவில்லை: யுஜிசி
தேர்வில்லாமல் தேர்ச்சி குறித்து யுஜிசி வட்டாரங்கள் கூறியதாவது,  கொரோனா பாதிப்புகள் காரணமாக அரியர் தேர்வுகளை  ரத்து செய்யலாம் என்று ஏப்ரல், ஜூலை மாத சுற்றறிக்கைகளில் குறிப்பிடவில்லை. மதிப்பீட்டு முறைகளை மாற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே யுஜிசியின் விதிமுறைகளில் உள்ளது.  அரியர் தேர்வுகள் குறித்து எந்த விதமான விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Tags : AICTE ,Minister of Higher Education , Arrears exams, AICTE letter, not received, Minister of Higher Education, confirmed
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...