×

மாணவர்கள் 40% கல்வி கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்தலாம்: கால அவகாசம் அளித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், கூடுதல் கட்டணத்தை வசூலித்த பள்ளிகளின் பட்டியலையும், பள்ளிகள் மீதான நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பள்ளி கல்வி துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், 40 சதவீத கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றம் நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 அப்போது அவர், 40 சதவீத கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் அளிக்க தனி மின்னஞ்சல் முகவரி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி துறை இயக்குனர்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்’ என்றார். அப்போது, பெற்றோர்கள் தரப்பில், 40 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கான கால  அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்று கோரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை அடிப்படையாக கொண்டு, பள்ளிகள் வெவ்வெறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.

கூடுதல் கல்வி கட்டணத்தை வசூலித்தால் அது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாக கருதப்படும். பள்ளிகளுக்கான முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தை செலுத்துவதற்கான  கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கையுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும். வழக்கு வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Students, 40% of the tuition fee, up to the 30th, can be paid, giving time, iCourt
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...