ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மரங்கள் அகற்றும் பணி

ஊட்டி:  ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்காக ராட்சத கற்பூர மரங்கள் அகற்றப்பட்டு,  நிலம் சமன்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  நீலகிரி மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூர், கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட  நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி அலைச்சலும்  ஏற்பட்டு வருகிறது.  இதனால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும்  என பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தினர். இதையடுத்து ஊட்டியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  அமைக்க கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதியளித்தது. தொடர்ந்து  ஊட்டி எச்.பி.எப். அருகே கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர்  சாலைக்கும் இடைேய வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர்  நிலமும் தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசுக்கு வரைப்படத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டது.

ஊட்டியில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ.447.32 கோடி ஒதுக்கீடு நிதியும் ஒதுக்கீடு  செய்யப்பட்டது. வனத்துறை வழங்கிய நிலத்திற்கு மாற்றாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான  50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டது. வனத்துறை நிலத்தை பயன்படுத்துவதற்கான சுற்றுசூழல் அனுமதி  கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள எச்.பி.எப். பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள்  இருந்தன. அவற்றை வெட்டி அகற்ற டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஒரு பகுதியில் சுமார் 130க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி  அகற்றப்பட்டுள்ளன. அங்கு நிலம் சமன் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள்  நிறைவடைந்தவுடன் அங்கு மருத்துவ கல்லூரியின் ஒரு பிரிவு (பிளக்) கட்டிடம் கட்டும் பணிகள் துவக்கப்பட உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக கம்பிகள், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வனத்துறை நிலத்தில்  மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடமும், கால்நடைத்துறை நிலத்தில் குடியிருப்புகளும் கட்டப்பட  உள்ளன. ஊட்டி மலைப்பகுதியாக விளங்குவதால் மாஸ்டர் பிளான் திட்ட விதிமுறைகளின்படி கட்டிட பணிகள்  மேற்கொள்ளப்பட உள்ளன. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் மருத்துவக்கல்லூரி வளாகம் அமைய உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: