×

அதிமுகவை ஆட்டிப்படைக்கும் எஸ்எம்எஸ் டீம்: யாருக்கு எம்எல்ஏ சீட் என்பதை தீர்மானிக்க மாநிலம் முழுவதும் விசாரணை

சென்னை: அதிமுகவை எஸ்எம்எஸ் என்ற டீம் ஆட்டிப்படைப்பதாகவும், யாருக்கு எம்எல்ஏ சீட் என்பதை தீர்மானிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமைச்சர்கள், நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால் இப்போதே தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் அமைச்சர்களுக்குள் கடும் மோதல் எழுந்தது. ஏனெனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இருவரையும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இந்த மோதல் தொடர்பாக 12 அமைச்சர்கள் ஒன்று கூடி இரு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின் அவர்கள் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்பின்னர் தற்காலிகமாக இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக தேர்தலை சந்திக்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது.குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கியுள்ளார். தேர்தலை சந்திக்க ஆந்திராவைச் சேர்ந்த சுனில் என்பவரது தலைமையிலான தனி நிறுவனத்தை அணுகி, அவர்களை தங்களுக்காக வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இந்த தனியார் நிறுவனத்துக்கு தனி அலுவலகம் போடப்பட்டுள்ளது. தற்போது சுனிலுடன், முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, முதல்வரின் மகன் மிதுன் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தினமும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தேர்தல் யுக்திகளை வகுக்கின்றனர். இந்த தகவல் தற்போது வெளியான பிறகு, இந்த 3 பேர் டீமுக்கு ‘எஸ்எம்எஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அதில் முதல் எழுத்தான எஸ், சுனிலையும், 2வது எழுத்தான எம் மிதுனையும், 3வது எழுத்தான எஸ் சத்தியமூர்த்தியையும் குறிக்கும்.

இந்த எஸ்எம்எஸ் டீம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சில இளைஞர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் மாநிலம் முழுவதும் தற்போது சுற்றுப் பயணம் செய்து, கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து கருத்துக்களை திரட்டி வருகின்றனர். அதிமுக ஆட்சி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். அமைச்சர்கள் யாருக்கெல்லாம் கெட்ட பெயர் உள்ளது, மாவட்டங்களில், தொகுதிகளில் அவர்கள் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்களா? அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்களில் யாருக்கெல்லாம் சீட் கொடுக்கலாம், அவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்தால் தனித்து போட்டியிடுவார்களா, தொகுதிகளில் செல்வாக்கானவர்கள் யார் என்று முழுமையாக விசாரணையை தொடங்கியுள்ளனர். விரைவில் இந்தக் குழுவினர், எஸ்எம்எஸ் டீம் தலைமையிடம் அறிக்கையை வழங்குவார்களாம். அதன்பின்னர் 234 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள், கூட்டணிக்கு கொடுக்கும் தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வாராம். இந்த தகவல் தற்போது அதிமுகவினர் மத்தியில் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* விஸ்வரூபம் எடுக்கிறது எஸ்எம்எஸ் விவகாரம்
எஸ்எம்எஸ் டீம், இதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லையாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மட்டுமே ஆலோசனை நடத்துகிறார்களாம். முடிவுகள் எடுக்கும்போதுகூட அவரை கலந்து ஆலோசிக்க திட்டம் இருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக துணை முதல்வரின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் எஸ்எம்எஸ் டீம் விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

Tags : SMS Team ,MLA , AIADMK, obsessive, SMS team, for whom MLA seat, statewide, investigation
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்