×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’

திண்டிவனம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 850 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் இரவு 8 மணிக்கு மேல் ஊழியர்களை தாக்கி பணம் மற்றும் மதுபானங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் எஸ்பிக்கள், டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் உள்ளிட்டோர் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும், விற்பனை செய்யப்பட்ட பணத்திற்கான பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், இரவு கடை மூடும்போது, அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும். காவலர்கள் துணையுடன் தான் தங்களது வீடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.

தற்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் முதல் கட்டமாக சுமார் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் பாதுகாப்பற்ற கடைகளுக்கு இரண்டாம் கட்டமாக 125 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கி சிசிடிவி கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவங்கப்பட உள்ளது. அதேபோல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சேப்டி லாக்கர் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்கள் இந்த மாத இறுதிக்குள் பொருத்தப்படுகிறது.

கடையில் வசூலாகும் பணத்தை அந்த பெட்டகத்தில் இரவு பாதுகாப்பாக வைத்து, காலையில் காவலர்கள் துணையுடன் வங்கியில் செலுத்தலாம். இதனால் ஊழியர்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும் என தெரிகிறது. இந்தப் பாதுகாப்பு பெட்டகம் வங்கிகளில் உள்ளது போல் எச்சரிக்கை மணியுடன் கூடிய வகையில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags : stores ,Villupuram ,Tasmac ,Kallakurichi , Villupuram, counterfeit, Tasmac store, ‘safety locker’ with alarm bell
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...