×

ஊரடங்கில் அதிக தளர்வு எதிரொலி: சென்னையில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு

* வாகனங்கள், தொழிற்சாலைகள் உற்பத்தி துவக்கம்
* பஸ், கார் போக்குவரத்தும் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வாகனங்கள் பெருமளவில் இயங்க துவங்கியுள்ளதால் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்து, வாகன ஓட்டம், தொழிற்சாலைகள், மால்கள் மூடப்பட்டு சென்னையே ஆரவாரமற்று காணப்பட்டது. இதனால் சென்னையில் காற்றின் மாசு குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத்துவங்கியது. இதையடுத்து தளர்வுகள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.  முன்னதாக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. பிறகு முழு பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக அரசு பஸ்கள் இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவையடுத்து தளர்வு வழங்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் செயல்பட துவங்கியுள்ளது. எனவே, சாலைகளில் கார், பைக், ஆட்டோ, பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.  இதனால் தற்போது சென்னையில் உள்ள சாலைகளில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

மற்றொருபுறம் முழு ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தவகையில் சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. அவை முறையே ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும். இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப்பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படியாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. முழு ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.


Tags : Chennai , More relaxation in curfew, Chennai, air pollution, increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...