×

டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் துவக்கம்

ராமேஸ்வரம்: டீசல் விலை உயர்வு, மீன்களின் விலை சரிவினால் தொழில் நஷ்டத்தை சந்தித்து வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டுள்ளன. டீசல் விலையேற்றத்தினால் மீன்பிடி தொழில் சார்ந்த மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்பும் மீனவர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நஷ்டம் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு மீன்பிடித்தொழில் நசிந்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப டீசல் விலையை குறைத்து முற்றிலும் வரி நீக்கி வழங்க வேண்டும் என்றும், மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என நேற்று முன்தினம் நடந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.


Tags : Fishermen ,Rameswaram ,strike , Diesel price hike, condemnation, Rameswaram, fishermen, strike
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...