×

டுபாக்கூர் திருமண தகவல் மையத்தின் உதவியுடன் 10 ஆண்டில் 8 பேரை மணந்து மாயமான மோனிகா: 66 வயதான கடைசி கணவன் கொடுத்த புகாரில் வழக்கு

காசியாபாத்: காசியாபாத்தில் திருமண தகவல் மையத்தின் உதவியுடன் கடந்த 10 ஆண்டில் 8 பேரை மணந்த மோனிகா என்ற பெண் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் வசிப்பவர் ஜூகல் கிஷோர் (66). கடந்த ஆண்டு அவரது மனைவி காலமானார்.  அவருக்கு மகன் இருந்தும் அவர் தந்தையை கண்டுகொள்ளவில்லை. அதனால், தனி வீட்டில் வசித்துவந்தார். தனிமை அவரை வாட்டி வதைத்ததால் டெல்லியைச் சேர்ந்த திருமண தகவல் மையத்தில், பெண் துணை கேட்டு பதிவு செய்தார். அதையடுத்து திருமண மைய உரிமையாளர் மஞ்சு கன்னா, ஜூகல் கிஷோரை தொடர்பு கொண்டு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மோனிகா மாலிக் (50) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அதையடுத்து இருவருக்கும் ஆகஸ்ட் 2019ல் திருமணம் நடந்தது. தம்பதிகள் கிஷோரின் கவி நகர் இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும், கிஷோரின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான இரண்டு மாதங்களில் மனைவி மோனிகா, வீட்டில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் மாயமானார். அதிர்ச்சியடைந்த கிஷோர், திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு, அந்த பெண் குறித்து மேலும் விசாரித்தார். அப்போது, கிஷோருக்கு திருமண மைய உரிமையாளர் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின்னர் கிஷோர் தன் நண்பர்களின் உதவியோடு, மோனிகாவின் முந்தைய கணவரை கண்டுபிடித்தார்.

அவரும், இவரை போலவே மோனிகாவிடம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கிஷோர் காசியாபாத் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து அந்த பெண் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி அபிஷேக் வர்மா கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ​​மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். பெரும்பாலும் மனைவியை இழந்த முதியவர்கள்தான். ஒவ்வொருவருடனும் சில மாதங்களே வாழ்ந்துவிட்டு அவர்களின் வீட்டில் இருக்கும் நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளார்.

அந்த பெண்ணின் திருமணங்கள் யாவும், மோசடி வேலையில் ஈடுபடும் திருமண தகவல் மைய ஏற்பாட்டாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்துள்ளது. அதையடுத்து மோனிகா, திருமண தகவல் மைய உரிமையாளர் உள்ளிட்ட சிலர் மீது ஐபிசி பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 420 (மோசடி), 380 (திருட்டு), 384 (மிரட்டி பணம் பறித்தல்), 388 (அச்சுறுத்தலால் மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.


Tags : Monica ,Dubakur Marriage Information Center , Dubakkur Marriage Information, Monica, Husband, Case
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா