×

நத்தம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பறைகள்: பொதுமக்கள் அவதி

நத்தம்: நத்தம் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள்  நிலங்கள் கிரையம், ஒத்தி, குத்தகை, திருமண பதிவு போன்றவற்றை பதிவு  செய்து வருகின்றனர். இங்கு ஒரு சார் - பதிவாளர் மற்றும் அவருக்கு கீழ் சுமார் 5 பேருக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பத்திர பதிவிற்காக  100 பேரிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும் பத்திரம் பதிவு நேரம் ஆன்லைன் மூலமாக  பெறப்பட்டு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டாலும் அந்த காலஅளவிற்குள் பத்திரப்பதிவு என்பது முடியாமல் போய் விடுகிறது. இதற்கு சார்-பதிவாளர் விசாரணை என்ற பெயரில் இடத்தின் தன்மை, மதிப்பிற்கான முத்திரைக் கட்டணம் சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? சொத்து  வாங்குபவர், கொடுப்பவர்களிடம் பணப்பரிமாற்றம் சரியாக கடைபிடிக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை கேட்டு பத்திரம் பதிவு நடக்கிறது.  இதனால் அங்கு சுமார் 2மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரையும் பொதுமக்கள் காக்க வைக்கப்படுகின்றனர்.

அப்போது அங்கு வந்து இருக்கும் பொதுமக்களுக்கு இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் அங்குள்ள கழிப்பறைகளை பயன்படுத்த முடியாதபடிக்கு  அவற்றை பூட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவசரத்திற்கு கழிப்பறை செல்வதானால் வெளியில்  பஸ்நிலையம் உள்ளிட்ட பிறபகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நேரங்களில் பதிவிற்கானவர் விசாரணைக்காக அழைக்கப்படும் போது அவர் இல்லை என்றால் அடுத்த பதிவை மேற்கொள்ளும் நிலைக்கு  அலுவலர் மற்றும் பத்திர எழுத்தர்களால் வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் பதிவிற்கான நேரம் நீட்டிக்கப்படுவதுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக  அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் காத்துக்கிடக்கும் அவலம் ெதாடர்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` நத்தத்தில்  2015ம்ஆண்டு சார்-பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.  இதில் கம்ப்யூட்டர் அறை, ஆவணக்காப்பறை உள்ளிட்டவைகளுடன் நவீனப்படுத்தி அங்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை  ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே கட்டப்பட்டுள்ளது. அவற்றை பூட்டியே வைத்துள்ளதால் அங்கு வருபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அங்குள்ள கழிப்பறையை திறந்து வைத்து அங்கு வரும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Tags : suffering ,Natham Deeds Office: Public Suffering , Locked ,toilets ,Natham ,Public, Suffering
× RELATED விலைவாசி உயர்வால் மக்கள் அவதி: பிரியங்கா தாக்கு