×

கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் பெண் மருத்துவரின் பாசப் போராட்டம் சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

பெங்களூரு: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பியுள்ளன. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மாதிரியான முன்கள பணியாளர்கள் அவர்களது குடும்பத்தை மறந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் தீஷாவின் பாசப் போராட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர் தீஷா, தனது ஒரு வயது மகனை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

இருப்பினும் கொரோனா அச்சத்தினால் அவர் மகனை தூக்கி, அணைத்து கொஞ்சாமல் வீட்டின் வாசலின் எல்லையில் நின்று அழைக்கிறார். அந்த குழந்தையும், தன் தாயை பற்றியணைக்க முயற்சிக்கிறது. இருந்தும் அது நடைபெறவில்லை. சில அடிகள் தூரம் நின்ற படியே தன் குழந்தையை மருத்துவர் தீஷா பார்த்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தீஷா மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புக்காக பாராட்டு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Tags : doctor ,struggle , Corona, female doctor, affectionate struggle
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்