×

சொத்தை பிரித்து தரக்கோரி தாய்க்கு சரமாரி கத்திக்குத்து: பாசக்கார மகன் கைது

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணயன். இவரது மனைவி ஆலயம்மாள் (72). இவர்களுக்கு பூபதி (53) உள்பட 4 மகன்கள் உள்ளனர். பூபதிக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது பெயரில், 9 சென்ட் பட்டா நிலம் உள்ளது. இதில், தனக்கு பங்கு பிரித்து தரும்படி பூபதி, அடிக்கடி தாய் ஆலயம்மாளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூபதி, மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தனது தாயிடம், சொத்தில் தனது பங்கை பிரித்து தரும்படி தகராறு செய்தார். அதற்கு, 4 மகன்களுக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும். அதற்காக, அதிகாரிகளிடம் மனு கொடுத்து அலைந்து திரிகிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆலயம்மாளின் வயிறு, கழுத்து, முகம் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை கண்டதும், பூபதி அங்கிருந்து தப்பிவிட்டார்.

தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆலயம்மாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூபதியை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : division ,Cook , Mother stabbed, son arrested
× RELATED அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும்...