×

கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கைது: துப்பாக்கி, பட்டாக்கத்திகள் பறிமுதல்

சென்னை: கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரை, போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு என 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இவருக்கு ஆளும்கட்சி பிரமுகர்களிடம் நெருங்கிய தொடர்பு உள்ளதால் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தலைமறைவாக இருந்த ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரை, அவரின் செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அதில், உத்திரமேரூர் அடுத்த புக்கத்துறை பகுதியில் அவரது சகோதரி சித்ரா வீட்டில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசர் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்று, பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் தனிப்படையினர் ரவுடி சிவக்குமாரை சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி சிவக்குமார் திருமணத்தின் போது உதவி ஆய்வாளர் ஒருவர் 6 சவரன் செயின் அன்பளிப்பாக அளித்தது குறிப்பிடத்தககது. இவரை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்த எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடி சரவணன் என்பவரையும் தனிப்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா சாலையில் குண்டு வீசிய வழக்கு
அமெரிக்க துணை தூதரகம் அருகே அண்ணா சாலையில் கடந்த மார்ச் 12ம் தேதி ரவுடிகள் சிடி மணி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் வந்த கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வீச்சு வழக்கில் ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாருக்கும் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவுடி சம்போ செந்தில் மட்டும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதன் பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Tags : murder ,Mylapore Sivakumar , Murder, Mylapore Sivakumar, arrested
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...