×

தண்ணீர் கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகும் அபாயம் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி எப்போது?

வேலூர்: தமிழகத்தில் 39 ஆயிரத்து 292 ஏரிகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்துள்ளது. இதில் பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளால் தடம் தெரியாமல் போய்விட்டது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆறுகளில் தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்க ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் ‘நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு ஆகியவற்றை வழங்கக்கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கக்கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு வழங்கிய மின் இணைப்பை பாரபட்சமின்றி துண்டிக்கலாம்.

நீர்நிலை ஆக்கிரமிப்பில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பத்திரப்பதிவு உட்பட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இதுகுறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இனி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாகவே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர். அதன்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் நிலை அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையின் ஊராட்சி செயலர்களும் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் அளிக்கக்கூடாது என்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துபவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தடுப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு சான்று வழங்க பரிந்துரைக்கும் விஏஓ, புதிய ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத ஊராட்சி செயலர், கிராம உதவியாளர் ஆகியோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்புச்சட்டம் 2007ன் கீழ் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் கண்காணிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கும், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994ன் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இன்றி கண்காணிக்கும் பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறைக்கும் உள்ளது.

நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் இருக்கும் நிலையில், நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பெரும்பாலான ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டது. இதேநிலை நீடித்தால் எதிர்கால சந்ததியினர் சுகாதாரமான குடிநீர் மட்டும் அல்ல, தண்ணீரே கிடைக்காமல் அவதிக்குள்ளாவார்கள். எனவே நீர்நிலைகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையாகும்.

Tags : suffering , Water, aquifers, lakes
× RELATED விலைவாசி உயர்வால் மக்கள் அவதி: பிரியங்கா தாக்கு