×

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்த விவகாரம்..: இந்தியாவின் நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு

பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கைக்கு சீன வர்த்தக  அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.  அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட  சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஜூலை மாதம் 47 ஆப்களையும் மத்திய அரசு தடை செய்தது. இந்த நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மொபைல் விளையாட்டான பப்ஜி விளையாட்டு செயலி உள்பட 118 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்திய பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கும் 118 மொபைல் செயலிகளை தடை செய்யப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக  அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில்,  சீன செயலிகளுக்கு எதிரான இந்தியாவின் தடை, சீனாவின் முதலீட்டாளர்களுக்கும் சேவை வழங்குபவர்களின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது.  இந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த  கவலை அளிக்கிறது. கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ministry of Commerce ,Chinese ,India ,Babji , pubg, 118 Processor, Prohibition, India, China, Ministry of Commerce
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...