×

இ-பாஸ் முறை ரத்து எதிரொலி கர்நாடகா, ஆந்திராவுக்கு 20 சதவீதம் பட்டு வேட்டிகள் அனுப்பி வைப்பு: சேலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தகவல்

சேலம்: இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு, கடந்த இரண்டு நாட்களாக 20 சதவீதம் பட்டு வேட்டிகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் பிரதான தொழிலாகவும், அரசுக்கு வருவாய் அளித்து வரும் தொழிலாகவும்  பட்டு ஜவுளி ெதாழில் இருந்து வருகிறது. சேலம், விருதுநகர், திருச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் அதிகமாாக உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐந்து மாதங்களுக்கு மேலாக பட்டு வேட்டி உற்பத்தி சரிவர இல்லாமல் போனது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பட்டு நெசவாளர்கள், உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசு உரிய அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக பட்டு உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள பட்டு ஜவுளிகளை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் மீண்டும் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் பட்டு ஜவுளி நெசவாளர்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில் தான் 90 சதவீதம் பட்டு வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  மீதமுள்ள 10 சதவீதம் தான் மற்ற பகுதிகளில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம் உள்பட பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.பட்டு வேட்டி உற்பத்தியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 மீட்டர் முதல் 50 மீட்டர் கொண்ட ஒரு பாவில் 12 முதல் 15 வேட்டி உற்பத்தி செய்யலாம். இந்த ேவட்டிகள் உற்பத்தி செய்ய 15 முதல் 20 நாட்களாகும். ஒரு பாவில் வேட்டியாக உற்பத்தி செய்தால் ₹4 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை கூலி கிடைக்கிறது.

கடந்த 5 மாதமாக வியாபாரம் இல்லாததால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வியாபாரம் இல்லாததால் ஒவ்வொரு பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ₹5 லட்சம் முதல் ₹1 கோடி அளவுக்கு பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் உள்ளிட்டவைகள் தேக்கமடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசு அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ேவட்டிகள் கர்நாடகா, ஆந்திராவுக்கு  அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரை பட்டு வேட்டிகளை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.கடந்த 1ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசு உரிய அனுமதி வழங்கியுள்ளது.

விமான போக்குவரத்து தேவை
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் பெரும்பாலும் வட மாநிலங்களுக்கும், இதைதவிர அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்பட நாடுகளுக்கும்  விற்பனைக்கு செல்கிறது. தற்போது சரக்கு லாரிகள் மூலம் பக்கத்தில் உள்ள கர்நாடகா, ஆந்திராவுக்கு மட்டுமே பட்டு வேட்டிகள் அனுப்பப்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து இல்லாததால் வெளி நாடுகளுக்கு பட்டு வேட்டி அனுப்புவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு வேஷ்டி தொழில் மீண்டும் சுறு சுறுப்படைய  விமான போக்குவரத்து வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.


Tags : cancellation ,E-pass ,Karnataka ,Andhra Pradesh , E-pass, cancellation , Silk ,Cutters,Information
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்லும்...