×

அரசு பஸ்களை அனுமதிக்க மறுத்ததால் டோல்கேட்டில் பயணிகள் மறியல்: கொடைரோடு அருகே போக்குவரத்து பாதிப்பு

வத்தலக்குண்டு:கொடைரோடு டோல்கேட்டில் அரசு பஸ்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, கொடைரோடு ஆகிய ஊர்களுக்கு செல்ல திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் பணம் செலுத்தி அனுமதி வாங்கியிருந்தது.ஆனால், இந்த ஊர்களுக்கு அனுமதி பெற்ற பதிவெண் கொண்ட அரசு பஸ்களை இயக்காமல் மற்ற பஸ்களை மாவட்ட போக்குவரத்து கழகம் நேற்று இயக்கியது. வண்டிகளின் எண் மாறியிருந்ததால் டோல்கேட் பணியாளர்கள் அரசு பஸ்களை அனுமதிக்கவில்லை.

அங்கிருந்த பணியாளர்களிடம் டிரைவர், கண்டக்டர்கள் பேசியும் பலனில்லை. அரை மணிநேரத்திற்கும் மேலாக பஸ்சில் காத்திருந்த பயணிகள் பொறுமையிழந்து, கீழே இறங்கி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்ததும் பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து டோல்கேட் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு பஸ் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு, பயணிகள் அதில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால், திண்டுக்கல் - மதுரை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் மீது தாக்குதல்
கொடைரோடு டோல்கேட்டை கடக்க நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடைமைகளுடன் டூவீலரில் வந்தார். அவர் டூவீலர் பாதையில் செல்லாமல் தவறுதலாக பாஸ்டேக் பாதையில் சென்றுள்ளார். இதை கண்ட டோல்கேட் பணியாளர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை பின்னால் வந்த வாகனஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டோல்கேட் பணியாளர்களின் அத்துமீறிய இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kodairodu ,government ,Tolkien , Passenger, picket , Tolkien , government ,Kodairodu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...