×

3வது போட்டியில் போராடி வெற்றி இங்கிலாந்துடன் டி20 தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில், 5 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற பாகிஸ்தான் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 21 ரன், ஹைதர் அலி 54 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது ஹபீஸ் 86* ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். அடுத்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

பான்ட்டன் 46 ரன் (31 பந்து, 8 பவுண்டரி), மொயீன் அலி 61 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), சாம் பில்லிங்ஸ் 26 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி, வகாப் ரியாஸ் தலா 2, இமத் வாசிம், ராவுப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளிடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்கள் நடக்க உள்ளன. முதல் டி20 சவுத்தாம்ப்டனில் நாளை நடக்கிறது.

Tags : match ,England ,Pakistan , 3rd match, struggling victory, England T20 series, equalized, Pakistan
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்