சென்னை வானகரத்தில் பூ வியாபாரிகள் திடீர் போராட்டம் - வாகனங்களுக்கு அ.தி.மு.க.-வினர் கட்டணம் வசூலிப்பதாக புகார்!!!

சென்னை:  சென்னையில் வானகர பூ சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு ஆளும் அதிமுகவினர் கட்டணம் வசூலிப்பதாக கூறி சாலையில் பூக்ககளை கொட்டி, வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக காய்கறி சந்தையானது திருமழிசை பகுதிக்கும், மாதவரம் பேருந்து நிலையம் அருகே பழக்கடைகளும் தற்காலிகமாக அமைக்க அனுமதி வழக்கப்பட்டன. இந்நிலையில் பூ கடைகளும் நடத்த அனுமதி அளிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பூ சந்தையானது வானகர பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து பூ சந்தையானது தற்போது வானகரத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூ கடைகளுக்கு சி.எம்.டி.ஏ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இங்கு பூக்கள் வாங்க வரும் வாகனங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு திடீரென 10 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிமுகவினர் கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து கடைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதாக கூறி, திடீரென வியாபாரிகள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூக்களை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுரவாயல் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>