×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரங்கநாதர் மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: கொரோனாவால் அண்டா தண்ணீரில் நடந்தது

திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருமலையில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற வேண்டிய சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ரங்கநாதர்  மண்டபத்தில் அண்டா தண்ணீரில் நேற்று நடந்தது. திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுவாமி துயிலில் இருந்து எழும் நிகழ்வான அனந்த பத்மநாப சுவாமி விரதம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த விரதம் சதுர்த்தசி நாளான நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி  நடந்தது. ஏழுமலையான் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், ஏழுமலையான் காலடியில் வைத்த கங்கணத்தை அர்ச்சகர்கள் கூடுதல் செயல்  அதிகாரி தர்மாரெட்டி கையில் கட்டினர்.தொடர்ந்து ஏழுமலையான் கருவறையிலிருந்து சக்கரத்தாழ்வார் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர்,  சக்கரத்தாழ்வாருக்கு தேன், பால், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அண்டாவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் தீர்த்தவாரி  செய்யப்பட்டது. இதில், அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறுவது வழக்கம். தீர்த்தவாரிக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடுவார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தெப்பக்குளத்தில் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், சுவாமிக்கு நடைபெறும் அனைத்து உற்சவங்களும் பக்தர்களின்றி தனிமையில் நடந்து வருவது போல்  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் ரங்கநாதர் மண்டபத்திலேயே நேற்று நடந்தது. அனந்த பத்மநாப சுவாமி விரதம் என்பது 108 திவ்ய தேசங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு  நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும் என்பது  குறிப்பிடத்தக்கது.

குருவாயூர் கோயிலில் 10ம் தேதி முதல் அனுமதி
திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் வரும் 10ம் தேதி முதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் சபரிமலை, குருவாயூர் உள்பட முக்கிய கோயில்கள் மூடப்பட்டன. பின்னர் கோயில்களை திறந்து பூஜை  செய்த போதிலும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இந்த நிலையில் திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோயிலில் வரும் 10ம் தேதி  முதல் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும்  தரிசனம் செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரேநேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கண்டிப்பாக  முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதுபோல குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்தவும் 10ம் தேதிமுதல் அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால்  தினமும் 60 திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Chakratahlvar Tirthavari ,Tirupati Ezhumalayan Temple ,Tirupati Ezhumalayan Temple Chakratahlvar Tirthavari , Tirupati ,Ezhumalayan ,Temple,Ranganathar Mandapam,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...