×

7 ஆண்டுக்கு முன்பான தேர்ச்சி செல்லாது டெட் தேர்வை மீண்டும் 80 ஆயிரம் ஆசிரியர்கள் எழுத வேண்டும்: அமைச்சர் விளக்கம்

சென்னை:  ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை  வழங்கப்படமாட்டாது. அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று  பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு செப்டம்பர் 1ம் தேதி  முதல் தமிழகத்தில் அனைத்து நூலகங்களும் இயங்கத்தொடங்கும் என்று அரசு அறிவித்தது.  இதையடுத்து, சென்னையில் உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  காலை கோட்டூர்புரம் வந்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு  செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 6 லட்சத்து 14 ஆயிரம் நூல்கள் உள்ளன. மத்திய அரசு அறிவிக்கும்  பொதுத் தேர்வுகள், சிவில்தேர்வுகள் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பிரிவுகளும் இன்று(நேற்று) முதல் செயல்படத்  தொடங்கியுள்ளன. மாலை நேரத்தில் தூய்மைப் பணிகள் நடக்க இருப்பதால் 8 மணி முதல் 2மணி வரை செயல்படும்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதைப் பற்றி யோசிக்கும் நிலை  இப்போது ஏற்படவில்லை. கடந்த 2011, 2013, 2014, 2019ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வு நடந்தன. தமிழகத்தில் மேற்கண்ட தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று காத்திருக்கும் சுமார்  80 ஆயிரம் பேருக்கு அந்த சான்றுகள் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதற்கு பிறகு அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற  வேண்டும். கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் குறித்து  நேரடியாக புகார் அளித்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.


Tags : teachers ,Minister ,TED , Passing ,7 years , 80 thousand ,Ted exam, Ministerial, explanation
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...