×

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண பாக்கியை செலுத்த 10 ஆண்டு அவகாசம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டண பாக்கி வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாக்கி தொகையை தவணை முறையில் செலுத்த 10  ஆண்டு அவகாசம் வழங்கியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட  சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபரில்  தொலைத்தொடர்பு துறை அனுப்பிய ஏஜிஆர் கட்டண நிலுவை நோட்டீசை எதிர்த்து, வோடபோன், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ₹1.47 லட்சம் கோடி  செலுத்த உத்தரவிட்டது. கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து சில தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண நிலுவையின் ஒரு பகுதியை செலுத்தின.  இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பாக்கியை தவணை  முறையில் செலுத்த 20 ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட வழக்கில் கடந்த  மாதம் 24ம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பை செப்டம்பர் 2ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது. இதன்படி, உச்ச  நீதிமன்றத்தில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

  அதில், ‘‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ஏஜிஆர் கட்டண பாக்கியை செலுத்த 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2031ம் ஆண்டுவரை  அவகாசம் வழங்கப்படுகிறது. முதல் தவணையாக, நிலுவையில்  10 சதவீதம் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச்  31ம்  தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால், அந்த நிறுவனம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, தாமதத்துக்கான அபராதமும் செலுத்த  வேண்டி வரும் என  நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.  ஏஜிஆர் நிலுவையில் வோடபோன் நிறுவனம்  இதுவரை ₹7,854 கோடி பாக்கி  செலுத்தியுள்ளது. தோராய  கணக்கீட்டின்படி இந்த நிறுவனம் இன்னும் ₹50,000 கோடியை அரசுக்கு செலுத்த  வேண்டியுள்ளது. பாரதி ஏர்டெல்  நிறுவனம், சுய மதிப்பீடு அடிப்படையில் ₹18,000 கோடியை செலுத்தியுள்ளது.

*  புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத  தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும்.
* தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த ஏஜிஆர் நிலுவை ₹1.47 லட்சம் கோடி. இதில், சில நிறுவனங்கள் ஒரு பகுதி  கட்டணம் மட்டும் செலுத்தியுள்ளன.
* தற்போது ஏஜிஆர் கட்டண பாக்கியை செலுத்த 2031ம் ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல்
தவணையாக, நிலுவையில் 10 சதவீதம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

Tags : Telecom companies ,AGR ,Supreme Court , Telecommunications ,companies,Supreme Court, ruling
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...