×

என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம்..காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுரேஷ் ரெய்னா ட்வீட்

புதுடெல்லி: என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக உள்ள சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினார். இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரெய்னாவின் உறவினர் கொலை செய்யப்பட்டதே அவர் நாடு திரும்பியதற்கு காரணம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும் மற்றொரு புறம் தோனி மற்றும் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே அவர் வெளியேறினார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து ரெய்னாவின் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தனது குடும்பத்திற்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து சுரேஷ் ரெய்னா முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா கொலை செய்யப்பட்டார், என் இரண்டு மாமா மகன்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். என்னுடைய அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என தெரியவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டால் பலபேருக்கு இதுபோன்ற கொடூரங்கள் நிகழக்கூடும், என கூறியுள்ளார்.


Tags : Suresh Raina, CSK, Punjab, Family, Attack
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...