×

ஊரடங்கால் பசி பட்டினியில் இறந்த மகன் சடலத்துடன் 3 நாட்கள் வீட்டில் முடங்கி கிடந்த தாய்: திருநின்றவூரில் பரபரப்பு

திருநின்றவூர்: திருநின்றவூர், சி.டி.எச் சாலையை சேர்ந்தவர் சரஸ்வதி (35). இவரது கணவர் ஜீவானந்தம் (42). இவர், பெங்களூருவில் ஓமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு சாமுவேல் (7) என்ற மகன் இருந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, கணவர் ஜீவானந்தத்தை விட்டு சரஸ்வதி பிரிந்து மகன் சாமுவேலுடன் திருநின்றவூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை சரஸ்வதி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, “கொரோனா ஊரடங்கால் எனக்கு வேலை இல்லை.

இதனால், கடந்த சில மாதங்களாக சரியான உணவு கிடைக்காமல் நானும், மகனும் அவதிப்பட்டு வந்தோம். கடந்த சில தினங்களாக நாங்கள் இருவரும் பசி, பட்டினியால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். தற்போது, எனது மகன் சாமுவேல் இறந்துவிட்டான்” என கூறினார். இதனைடுத்து, அங்கிருந்து திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, சரஸ்வதி தங்கியுள்ள மாடி வீட்டில் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டுக்கிடந்தன.

மேலும், வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. பின்னர் போலீசார், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அழுகிய நிலையில் சாமுவேல் சடலம் தரையில் கிடந்தது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சடலம் முழுவதும் புழுக்கள், ஈக்கள் மொய்த்தபடி கடும் துர்நாற்றம் வீசியது. சிறுவன் இறந்து குறைந்தது 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்தாரா? அல்லது வறுமை காரணமாக மனமுடைந்து தாய் சரஸ்வதி அவனை கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், சரஸ்வதி வசிக்கும் வீட்டை சுற்றி அவரது உறவினர்கள் சிலரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும், சரஸ்வதிக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருப்பதால், அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.


Tags : home , Curfew, starvation, dead son's body, 3 days, paralyzed at home, mother, commotion in Thiruninravur
× RELATED எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்