×

போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்க எம்சாண்ட் வழிகாட்டி நெறிமுறை தயார்: தவறு செய்தால் 6 மாதம் சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை: போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் எம்சாண்ட் வழிகாட்டி நெறிமுறை தயாராக உள்ள நிலையில், விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்படுத்துவதை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 216 எம்சாண்ட் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளன. 50 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்தநிலையில், 800க்கும் மேற்பட்ட குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதனால், இந்த குவாரிகளில் இருந்து தயாரிக்கப்படும் எம்சாண்ட் ஒரிஜினல் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சிலர் எம்சாண்ட் மணல் வாங்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆற்றுமணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுமான நிறுவனங்கள் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இப்படிபட்ட சூழலில் எங்கு ஒரிஜினல் மணல் கிடைக்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் சில நேரங்களில் ஜல்லிகளை உடைக்கும் கழிவுகளாக வரும் தேவையற்ற துகள்களை எம்சாண்ட் எனக்கூறி சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், கட்டிடங்களின் உறுதி தன்மையில்  கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எம்சாண்ட் மணல் விற்பனையை முறைப்படுத்தும் வகையில் எம்சாண்ட் குவாரிகளுக்கு புதிதாக வழிகாட்டி நெறிமுறை வகுக்க தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனர் தலைமையில் பொதுப்பணி, வருவாய், கனிமவளம், மாசுகட்டுபாட்டு வாரிய உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  

அந்த குழுவினர் ஆலோசனை நடத்தி போலி எம்சாண்டை தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த குழுவினரின் பரிந்துரைப்படி,  எம்சாண்ட் குவாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டு சான்று புதுப்பிக்க வேண்டும். மதிப்பீட்டு சான்று வழங்கும் குழுவினர் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யும். அப்போது குவாரிகளில் போலி எம்சாண்ட் தயாரிப்பது தெரிய வந்தால் மதிப்பீட்டு சான்று ரத்து செய்யப்படும். குவாரிகளுக்கு சீல்  வைக்கப்படும். மேலும், போலி எம்சாண்ட் தயாரிப்பது தெரிய வந்தால் 6 மாதம் சிறை தண்டனை, ₹5 லட்சம் அபராதம் விதிக்கலாம் என்று அந்த வழிகாட்டி நெறிமுறையில் பரிந்துரைத்துள்ளது. இந்த குழுவினரின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு சார்பில் கவர்னரின் ஒப்புதலை பெற்று ெகாண்டு வரப்படும். இதன் மூலம் போலி  எம்சாண்ட் உற்பத்தி செய்வது தடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

Tags : Emsant , Prepare Emsant Guide Protocol, Prevent Fake Emsant Use, 6 months imprisonment, Rs. 5 lakh fine
× RELATED போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை...