×

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை முழுமையாக ரத்து; அனைத்து வழிபாட்டு தலங்களையும் நிபந்தனையுடன் திறக்க அனுமதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

* சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி
* செப்.30 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை

1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.  

2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள்  தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.  இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.  வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

3) மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.  

6) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  

8) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9) தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

10) உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது.  எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

11) திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

12) தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், 1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.  எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

13) வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14) நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

15) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16) ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.  

17) மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் இரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

18) விமானப் போக்குவரத்து  மூலம்  பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், இரயில் போக்குவரத்து  மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.  

19) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள  நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.  இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.


பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Tags : Tamil Nadu ,places ,Government of Tamil Nadu Action Notice ,phase ,Government of Tamil Nadu , 7th phase, curfew ends tomorrow, curfew,extended till September 30 ,various restrictions, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...