கிருஷ்ணகிரியில் கனிமவளங்கள் கடத்தும் டிரைவர்கள் மீது குண்டாஸ்: கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமவளத்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 387 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, விதிகளுக்கு முரணாக இயங்கிய 15 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி அனுமதிச்சீட்டு இன்றி, கனிமவளங்களை கடத்தும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிச்சீட்டு இன்றியும், சட்டவிரோதமாகவும் கனிமங்களை கடத்த முயன்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொடர் கடத்தலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், ஆர்டிஓக்கள் கிருஷ்ணகிரி கற்பகவள்ளி, ஓசூர் குணசேகரன், புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குநர் சுரேஷ், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>