ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே இறந்த நிலையில் குட்டி யானை பிறந்ததால், அதை புதைத்த இடத்தை விட்டு அகலாமல் பெண் யானை நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திண்டுக்கல் அருகே, ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இங்கு தண்ணீர் குடிப்பதற்காக வனவிலங்குகள் அடிக்கடி வரும். கடந்த சில மாதமாக 5 யானைகள் மற்றும் குட்டிகள் அணைப் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் ஒரு பெண் யானைக்கு குட்டி பிறந்துள்ளது. ஆனால், காலை 7 மணி வரை அப்பகுதியை விட்டு பெண் யானை உள்ளிட்ட யானைகள் அகலவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.பின்னர் அங்கு சென்று பார்த்தபோது யானைக்குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து வனஅலுவலர் வித்யா, வனச்சரக அலுவலர் செந்தில், வனவர் மகேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முன்னிலையில் மாலை 5 மணி அளவில், கால்நடை மருத்துவர் சிவமணிகண்டன், யானைக்குட்டியை பிரேத பரிசோதனை செய்து, உடலை புதைத்தனர். பின்னர் புதைக்கப்பட்ட இடத்தையே பெண் யானை சுற்றி சுற்றி வந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
கால்நடை மருத்துவர் கூறுகையில், ‘‘குட்டி யானை இறந்த நிலையில் பிறந்ததால், தாய் யானை உள்ளிட்ட யானைகள் அதே இடத்தில் நின்றுள்ளன’’ என்றார்.
இதுகுறித்து வனஅலுவலர் வித்யா கூறுகையில், ‘‘குட்டி யானை இறந்ததால், பெண்யானை ஆக்ரோஷத்துடன், அணைப்பகுதியில் உலா வருகிறது. இதனால், பொதுமக்கள் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல ஒரு வாரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
