×

நாட்டில் சர்வாதிகார ஆதிக்கம் அதிகமாகி வருகிறது: சோனியா குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: ‘‘ஜனநாயக நாடான இந்தியாவில், சர்வாதிகாரத்தின் செல்வாக்கு அதிகமாகி வருகிறது,’’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நவா ராய்ப்பூரில், இம்மாநிலத்துக்கான புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், அவர் பேசியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக நாட்டை தடம் புரள செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது ஜனநாயகத்தின் முன் புதிய சவால்கள் வந்துள்ளன. நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கி ஆட்சி செய்து வரும் ஏழைகளுக்கும், நாட்டுக்கும் எதிரான சக்திகள், நாட்டில் வெறுப்புணர்வையும், வன்முறை விஷத்தையும் பரப்பி வருகின்றன.

அவர்களின் மோசமான சிந்தனை, மக்களிடையே பரப்பப்படுகிறது. நாட்டில் கருத்து சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயக நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டின் ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் செல்வாக்கு உயர்ந்து  கொண்டு வருகின்றது. அவர்கள் நாட்டில் உள்ள மக்களின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். அவர்கள் என்ன விரும்புகிறார்கள்? நாட்டில் உள்ள மக்கள், இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், வீரர்கள் என அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என  விரும்புகின்றனர். இன்று ஒரு முக்கியமான நாள். ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதுகாப்போம் என நாம் உறுதி மொழி ஏற்க வேண்டும். நாம் ஆட்சியில் இருக்கும் வரை, வரிசையில் காத்து கிடக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும் எனவும் உறுதி மொழி எடுக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா பேசியுள்ளார்.

* கற்பனை கூட செய்யவில்லை
சோனியா தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், ‘‘தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அரசியலமைப்பு சபையின் சபாநாயகர் மவலாங்கர், டாக்டர் அம்பேத்கர் மற்றும் நமது முன்னோர்களால் சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு இதுபோன்ற கடினமாக சூழலை எதிர்கொள்ளும் என்றும், அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் யாரும் கற்பனை கூட செய்திருக்க  மாட்டார்கள் ,’’ என்றார்.


Tags : Dictatorship ,Sonia ,country , In the country, dictatorial domination, Sonia accuses
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....