×

கேரள தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஸ்வப்னாவுடன் இணைந்து வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி தொடங்கியதாக முன்னாள் அரசு செயலர் தகவல் அளித்துள்ளார். வங்கி லாக்கரில் இருந்த ரூ.1 கோடி எங்கிருந்து வந்தது என தனக்கு தெரியாது எனவும் சிவசங்கரனின் ஆடிட்டர் தகவல் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ., சுங்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்தின. இப்போது அமலாக்கத்துறை விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்குமேல் பணம், ஒரு கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ஸ்வப்னாவும், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் ஆடிட்டரும் சேர்ந்து ஒரு வங்கியில் லாக்கர் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறை, ஆடிட்டரிடம் விசாரணை நடத்தியது. ஆடிட்டர் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனின் உத்தரவின்பேரில்தான் ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டாக லாக்கர் எடுக்கக் கையெழுத்து போட்டேன். இதனால் எனக்குச் சட்டச்சிக்கல் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. லாக்கரிலிருக்கும் பணமும் நகைகளும் எங்கிருந்து வந்தன என எனக்குத் தெரியாது என்றார்.

ஆனால் ஸ்வப்னா இது பற்றி அளித்த வாக்குமூலத்தில், கேரள அரசின் லைஃப் திட்டத்தின்கீழ், துபாய் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுத்தது. அதற்காக யு.ஏ.இ தூதரகம் மூலம் எனக்கு ஒரு கோடி ரூபாய் கமிஷன் கிடைத்தது. அந்தப் பணத்தை நான் வங்கியில் டெபாசிட் செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் கூறியதன்பேரிலேயே லாக்கரில் பணத்தை வைத்தேன் என்றார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

அமலாக்கத்துறைக்கு சிவசங்கரன் அளித்த வாக்குமூலத்தில், நான் தலைமைச் செயலக அலுவலகத்தில் இல்லாத சமயத்திலும் ஸ்வப்னாவும் ஸரித்தும் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள். நான் இல்லாதபோது யாரைப் பார்க்க அவர்கள் வந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் சிவசங்கரனுடன் மட்டுமே நட்பில் இருந்ததாகக் கூறியுள்ளார்.



Tags : Enforcement Department ,court ,Kerala ,Ernakulam , Enforcement Department, Kerala Gold Smuggling
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...