×

ஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்: இடத்தை ஆய்வு செய்தார் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைய உள்ள இடத்தை அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு செய்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து சனாதன தா்மத்தை பரப்பும் வகையில், நாட்டில் உள்ள பல இடங்களில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி செய்து வருகிறது. சென்னையிலும் கோவில் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் இலவசமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே, வட மாநிலத்தில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தேவஸ்தானம் நித்திய கைங்கரியங்களை குறைவின்றி நடத்த அா்ச்சகா்களை ஏற்பாடு செய்துள்ளது.

ஹைதராபாத், அமராவதி, ஒடிஷா, காஷ்மீரிலும் கோவில் கட்டும் நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் அரசு ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தை அம்மாநில அதிகாரிகளுடன்  இணைந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பார்வையிட்டுள்ளார். ஜம்மு அதிகாரிகளுடன் பேசிய சுப்பா ரெட்டி, தேவஸ்தான பொறியாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, நிலத்தைப் பரிசோதித்து, கோயில் கட்டுவதற்கான திட்ட வரையறையைத் தயார் செய்வார்கள், என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஜம்மு கலெக்டர் திருமதி சுஷ்மா, மாவட்ட மேம்பாட்டு அதிகாரி ரமேஷ் சந்தர், கூடுதல் இணை இயக்குனர்  ஷாம் சிங், உதவி இயக்குனர் ராகேஷ் துபே உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
 

Tags : Jammu ,Kashmir ,Tirupati Ezhumalayan Temple ,Chairman of the Board of Trustees ,Subba Reddy , Jammu and Kashmir, Tirupati Temple, Board of Trustees, Subba Reddy
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...