×

தொடர் மின்தடையால் தண்ணீர் கிடைக்காமல் கிராமமக்கள் அவதி

சாயல்குடி:  முதுகுளத்தூர் அருகே ராமலிங்கபுரத்தில் தொடர் மின்தடையால் 3 நாட்கள் தண்ணீர் இன்றி கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக  கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியம் குமாரக்குறிச்சி பஞ்சாயத்தில் ராமலிங்கப்புரம், எர்தாகுளம், காலனி தெரு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 100க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். ராமலிங்கபுரத்தில் கடந்த 2013ல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று  கட்டப்பட்டு, அதன் மூலம் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை தொட்டி சேதமடைந்ததால்  கடந்தாண்டு இடிக்கப்பட்டது. இதனால் பல மாதங்கள் காவிரி கூட்டு குடிதண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் கிணற்று தண்ணீரை அருகிலுள்ள  தொட்டியில் சேமித்து, அதனை கிராமமக்கள் குளிப்பதற்கும், மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.  மேலும் குடிப்பதற்கு புதிதாக  அமைக்கப்பட்ட ஆர்.ஓ பிளான்ட் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இக்கிராமத்திற்கு உயர்அழுத்த மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் போதிய மின்சாரம் இன்றி ஆர்.ஓ  பிளான்ட் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின் மோட்டார்களை இயக்க முடியாமல் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற  முடியவில்லை. இதனால் குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி டிராக்டர்களில்  விலைக்கு விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே  உயர்அழுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்கி ஆர்.ஓ பிளாண்ட், போர்வெல் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள்  மீண்டும் செயல்பட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமககள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Villagers ,suffer ,lack ,water , continuous ,power ,outages
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...