×

இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் தாமதமாகும்? ஊழியர்களுக்கு போதிய பயிற்சி தரவில்லையென புகார்

விருதுநகர்: இணையதள தொடர்பு கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மை திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊதிய பட்டியல் தயாரிப்பதற்கு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் இணையதள தொடர்பு  சரிவர கிடைப்பதில்லை.

அப்படியே கிடைத்தாலும், தொடர்பு சிறிதுநேரத்தில் துண்டிக்கப்படுகிறது. இதனால் தயாரித்த ஊதியப்பட்டியல் விபரங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. மீண்டும் தொடர்பு கிடைத்தாலும் ஆரம்பம் முதல் மீண்டும் ஊதியப்பட்டியல் தயாரிக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஊதியப்பட்டியல் தயாரித்து பட்டியல் எண் கிடைப்பதற்கு 5 மணிநேரம் ஆவதால், பட்டியல் எண் கிடைத்த பிறகே அடுத்தக்கட்ட வேலையை தொடர முடிகிறது. ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் பற்றி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கவில்லை. வாய்மொழி வகுப்பாகவே நடத்தி உள்ளனர்.

ஊதிய பிடித்தங்கள் செய்வதில் பிரச்னைகள் இருப்பதால் குறைபாடுகளை சரி செய்த பிறகு, ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் திட்டத்தில் ஊதியம் மற்றும் இதர பட்டியல் தயாரிக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தில் உள்ள குளறுபடியால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்றும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

Tags : delay ,teachers ,government employees , Internet connection, drag, government employee, teacher, this month's salary, late ?, employee, adequate training, complaint
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...