×

தவணை சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஓடி மறைந்து கொள்வதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘கொரோனா ஊரடங்கால் மத்திய அரசு அளித்த சலுகையின்படி தவணை செலுத்தாத மக்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி போடும் செயலுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்த பிரச்னையில் ரிசர்வ் வங்கியின் பின்னால் மறைந்துக் கொண்டு செயல்படுவதா?’ என மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், வங்கிகள், நிதி நிறுவனங்களில் அவர்கள் வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை. கடன் கொடுத்த நிறுவனங்களும் இந்த தவணையை கேட்டு மக்களை தொல்லை செய்யக்கூடாது,’ என்று கடந்த மார்ச்சில் முதல்கட்ட ஊரடங்கை அறிவித்தபோது, மத்திய அரசு சலுகை அளித்தது.

அதன்படி, இதுவரை 6 மாதங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவை மதிக்காத தனியார் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இதுவரை செலுத்தாத தவணைக்கு வட்டிக்கு மேல் வட்டியை போட்டு, மிரட்டி பணத்தை வசூலித்து வருகின்றனர். இதன் காரணமாக, பல மாநிலங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன. இந்நிலையில், இந்த தவணை சலுகையை பயன்படுத்தும் மக்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி போடப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தவணை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது. வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால் வங்கிகளுக்கு ரூ.2.01 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இதன் காரணமாக வங்கிகள் பாதிக்கப்படுவதோடு, பணத்தை டெபாசிட் செய்துள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள்,’ என்று அது கூறியிருந்தது.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், “இக்கட்டான இந்த நேரத்தில் ஒரு பக்கம் தவணை செலுத்த கால அவகாச சலுகை அளித்துவிட்டு, மறுபக்கம் வட்டி வசூலிப்பது மிகத் தீவிரமான பிரச்னை. அவகாசம் வழங்கிய சலுகை காலத்தில் கடன்களுக்கான எந்த வட்டியும் வசூலிக்கக் கூடாது. அல்லது வட்டிக்கு வட்டி போடக்கூடாது என்ற விஷயங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதற்கு மத்திய நிதியமைச்சகமும் பதில் அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி தரப்பு செய்த வாதத்தில், ‘கடன் தவணையை செலுத்தவில்லை என்றாலும் கூட, கண்டிப்பாக வட்டியை செலுத்த வேண்டும். இதனால், வங்கிகள் பாதிப்படைவது மட்டுமின்றி, கடனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் தான் மிகச்சிரமமாக அமையும்,’ என கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கால்தான், இந்த பிரச்னையே ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், நீங்கள் (மத்திய அரசு) ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வேலையாக வைத்துள்ளீர்கள். இது சரிதானா என்பதுதான் எங்களின் முக்கிய கேள்வி,’’ என்றனர்.  மேலும், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, அடுத்த ஒரு வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* பேரிடர் சட்டத்தின் மூலம் பிரச்னையை தீர்க்க முடியும்
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறுகையில், ‘‘இது, உங்கள் (மத்திய அரசு) கடமைகளை செய்வதற்கான நேரம்  மட்டுமே கிடையாது. மக்களுக்கு தேவையான நிவாரணத்தையும் வழங்குவதும் அதில் அடங்கும். இதைத்தவிர, வங்கி கடன் விவகாரங்களில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முடிவு, ரிசர்வ் வங்கியை மட்டுமே சார்ந்தது எனக்கூறி தொடர்ந்து மத்திய அரசு தப்பித்து வருகிறது. இதனை நீதிமன்றம் ஏற்க விரும்பவில்லை. குறிப்பாக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இத்தகைய விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்,’’ என்றனர்.

Tags : government ,Reserve Bank ,Supreme Court , Installment concession, interest collection on interest, Reserve Bank, Federal Government, Supreme Court, condemnation
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...